

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதைதடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் க.சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக தலைமைச் செயலர் க.சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி மூலம்நடைபெற்றது. இதில், மாவட்டங்களில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தலைமைச் செயலர் க.சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் கரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு, கூட்டம் கூடுவதை தவிர்க்க போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டங்களில் ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கி வரன்முறைப்படுத்தவும், ஆட்சேபம் உள்ள புறம்போக்குநிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைதடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளகுடும்பத்தினருக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவது, அதற்காக எடுக்கப்பட வேண்டிய கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் அவர்ஆலோசனை வழங்கினார். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவது, பட்டா வழங்கப்பட்ட இடங்களில் அவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தருவது, ஆன்லைன் மூலம் பட்டா மாற்றம் செய்து விரைந்து வழங்குவது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.