

புதுச்சேரியில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ நேற்று முதல் அமலாகியுள்ளது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல மாதங்களாக மூடியுள்ளன. அரிசிக்கு பதிலாக பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதுவும் பல மாதங்களாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
இச்சூழலில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் வல்லவன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ள விவரம்:
புதுச்சேரியில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ நவம்பர் 4-ம் தேதி (நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தில் இருந்து வந்து புதுச்சேரியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உணவு தானியத்துக்கான மானியத்தை அவர்கள் வங்கி கணக்கில் பெற முடியும். வேலை செய்ய வந்தவருக்கு மட்டுமே உணவு மானியம் கிடைக்கும். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் உணவு தானியத்தை அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் பெறலாம். முக்கியமாக இந்த நபர்களுக்கு புதுச்சேரியில் ரேஷன் கார்டு இருக்கக் கூடாது. மானியத்தை பெற விரும்பும் தொழிலாளர்கள் 0413 - 14445 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று, பதிவு செய்து பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டம் புதுச்சேரி பகுதிக்குட்பட்ட காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடை பொருள் விநியோகம் தடை செய்யப்பட்டு, புதுச்சேரி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.