

செல்போன் மூலம் விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளின் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகரித்துவருகிறது. இதில் பலரது கவனத்தையும் அதிகம் ஈர்த்திருப்பது ஆன்லைன் சீட்டாட்டம். குறுகிய நேரத்தில் அதிக தொகை சம்பாதிக்கலாம் என்ற ஆசைவார்த்தையை நம்பி இளைஞர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை இதில் ஈடுபட்டுவருகின்றனர். முதலில் ஆர்வத்தை தூண்டும் வகையில், சில விளையாட்டுகளில் வெற்றி கிடைத்து லாபம் கிடைக்கும். தொடர்ந்து விளையாடும்போது, இறுதியில் நஷ்டமே மிஞ்சுகிறது. லாபத்துக்காக முதலில் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்கள், பின்னர் தாங்கள் போட்ட முதலீட்டுத் தொகையை எடுத்துவிட வேண்டும் என கடன் வாங்கியாவது இந்த சூதாட்டத்தை விளையாடும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் இறுதியில் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கோவையில் மட்டும் கடந்த சில நாட்களில் மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேற்று அளித்த மனுவில், ‘‘ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை கடந்த மாதம் ஆந்திர அரசு தடை செய்துவிட்டது. அதுபோல, தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘நேரடியாக விளையாடினாலும், ஆன்லைன் மூலமாக விளையாடினாலும் சூதாட்டம் என்பது சட்டப்படி தவறு. சுய ஒழுக்கத்தின் மூலம் இவற்றை தடுக்கலாம். ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சம்மந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த திறன் பயிற்சி மையத்தின் இயக்குநரான மனநல நிபுணர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கூட்டுக்குடும்பம், உறவுகள் என்ற பிணைப்பை தற்கால தலைமுறை இழந்து வருகிறது. உறவுகள் நன்றாக இருக்கும்போது பொதுநலத்தில் அக்கறை வரும். சூதாட்டம் போன்ற தவறான எண்ணங்கள் மனதில் ஏற்படுவதை தடுக்கும். அவர்களுடன் கலந்துரையாடும்போது மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகள் அகலும். இளைஞர்கள் நல்ல நண்பர்களை கொண்டு இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து, அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். நேர்மறையாக சிந்திக்க வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை தீர்வல்ல. உடனடியாக குடும்பத்தினரிடம் தெரிவித்து மனம் விட்டு பேச வேண்டும். ஆலோசனை மையங்களை அணுகி கவுன்சலிங் பெற வேண்டும்’’ என்றார்.