புதுப்பட்டினத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வார வேண்டும்: சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை

புதுப்பட்டினம் அடுத்த பிருக்ளிமேடு பகுதியில் புதர் மண்டி தூர்ந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் இணைப்பு கால்வாய்.
புதுப்பட்டினம் அடுத்த பிருக்ளிமேடு பகுதியில் புதர் மண்டி தூர்ந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் இணைப்பு கால்வாய்.
Updated on
1 min read

கல்பாக்கம் மற்றும் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் மழைக்காலங்களில் சேகரமாகும் மழைநீர் வடிந்து சென்று கடலில் கலப்பது வழக்கம். இந்நிலையில், புதுப்பட்டினம், ஹாஜியார் நகர், ஊஸ்டர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் புதர் மண்டியும் குப்பை கொட்டப்பட்டு தூர்ந்தும் உள்ளது.

இதனால், வசுவசமுத்திரம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மழைநீர் குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. மேலும், பிருக்ளிமேடு பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் இணைப்பு கால்வாய் தூர்ந்துள்ளதால், கடந்த 2 ஆண்டுகளாக மேற்கண்ட கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து வருகிறது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதந்த பின்னரே, அவசரகதியில் ஆங்காங்கே கால்வாய் வெட்டி வெள்ள நீரை வெளியேற்றும் நிலை உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. எனவே குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்வதை தடுக்கும் வகையில் பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கல்பாக்கம் சுற்றுப்புற கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறும்போது, "புதர் மண்டி தூர்ந்துள்ளதாக கூறப்படும் பக்கிங்ஹாம் கால்வாய் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in