

பொதுமக்கள் ஸ்டார் 2.0 ஆன்லைன் வழி ஆவணதாரர் விவரங்களை உள்ளீடு செய்யும்போது விற்பனை ஆவணத்தைப் பொறுத்து வருமான வரித்துறையின் படிவம் 60, 61-Aவை உள்ளீடு செய்ய வேண்டும் எனப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டம் முதல்வர் பழனிசாமியால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று தொடங்கி வைக்கப்பட்டு தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் எளிய முறையிலான ஆவணம் உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வசதியைப் பயன்படுத்தி ஆவணதாரர்கள் விவரம் மற்றும் சொத்து தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்து பொதுமக்களே ஆவணத்தை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருமான வரிச்சட்டம் விதிகள் 1962 விதி 114(B)-ன் படி ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து எழுதிக் கொடுக்கும் மற்றும் எழுதிப் பெறும் நபர்களின் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (PAN) தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேலும், வருமான வரிச்சட்டம், 1962 பிரிவு 285 BA மற்றும் வருமான வரிச்சட்டம் விதிகள், 1962 விதி 114(E)-ன்படி ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரைய ஆவணங்களின் விவரங்கள் படிவம் 61-Aவில் வருமான வரித்துறைக்கு அளிக்கப்படுகிறது. ஆவணப்பதிவின்போது மேற்கண்ட படிவங்களைத் தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
தற்போது படிவம் 60, 61-A விவரங்களை இணையதள வழி உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இனி வரும் காலத்தில் வருமான வரிச் சட்டம் மற்றும் விதிகளின் படி மேற்கண்ட விவரங்களை, ஆவணத் தயாரிப்பின்போதே, உள்ளீடு செய்ய இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு பதிவுத்துறை தெரிவித்துள்ளது.