Published : 04 Nov 2020 08:36 PM
Last Updated : 04 Nov 2020 08:36 PM

உயிர் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யாமல் நீதிமன்றத்தில் தமிழக அரசு அவகாசம் கேட்பதா?- ஸ்டாலின் கண்டனம்

சென்னை

ஆன்லைன் சூதாட்டத்தைத் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் தடைசெய்யத் தயங்குவது ஏன்? என்ன உள்நோக்கம்? எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் “எங்களுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள்” எனக் கேட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகத்தில் ‘ஆன்லைன்’ சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில் அது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று எடப்பாடி அதிமுக அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடர்பாக வழக்குகள் ஏற்கெனவே தொடரப்பட்டு - ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அதிமுக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிமுக அரசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது “எங்களுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள்” எனக் கேட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி - வறுமையின் கோரப்பிடியில் சிக்கி - குடும்பத்தை நட்டாற்றில் தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து அதிமுக அரசு கவலைப்படவும் இல்லை, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

“சூதாட்டம் கொடுமையானது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுப்பது குறித்து அரசு சட்டப்பேரவையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை மாதமே உத்தரவிட்டும், மூன்று மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்றைய தினம் வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்குப் பிறகாவது முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சிறிய தொகையை முதலில் பரிசாகக் கொடுத்து - ஆசை காட்டி - பிறகு பெரிய தொகைக்கு நஷ்டத்தை - இழப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை இருட்டில் தள்ளும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன.

தமிழகத்தில் மட்டும் இதைத் தடைசெய்யத் தயங்குவது ஏன்? என்ன உள்நோக்கம்? இயந்திரங்களை (BOTS) வைத்து இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும் எனவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x