Published : 04 Nov 2020 08:23 PM
Last Updated : 04 Nov 2020 08:23 PM

ரோந்து வாகனத்தில் புகார் அளிக்கும் திட்டம்: சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை

ரோந்து வாகனத்தில் புகார் அளிக்கும் திட்டத்தைச் சென்னை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார். ரோந்து வாகன போலீஸாரிடம் பெண்கள், முதியோர் பயன்பாட்டிற்கு அவசர உதவி எண்கள் அடங்கிய பிரசுரங்கள் தேடல் லைட் (Serach Light), சுடுநீர்க் குடுவைகளை (Flask) வழங்கினார்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னைப் பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னைப் பெருநகரப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும், குற்றங்களைத் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னைப் பெருநகரில் செயல்பட்டு வரும் 136 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னைப் பெருநகரில் பிரதான சுற்றுக் காவல் வாகனம் (Main Patrol Vehicle), கூடுதல் சுற்றுக் காவல் வாகனம் (Additional Patrol vehicle), ஜிப்சி ரோந்து வாகனம் (Gypsy Patrol), சிறப்புச் சுற்றுக் காவல் வாகனம் (Special Patrol), பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரின் உதவிக்காக அம்மா ரோந்து வாகனம் எனச் சென்னைப் பெருநகரில் 355 சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு, பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் சம்பவ இடம் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

GPS, MDT கருவிகள் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டு, வாகனங்கள் நிலை கொண்டுள்ள இடம் கண்டறியப்பட்டும், முக்கியப் பகுதிகளில் செயல்படும் 10 ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், காவல் ஆணையரகத்தில் உள்ள 7 ஆவது தளத்தில் இயங்கி வரும் நவீனக் கட்டுப்பாட்டறை மூலம் கேமரா பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அவசர எண் 100 மூலம் புகார் பெறப்பட்ட உடன் சென்னைப் பெருநகரக் காவல் மண்டலக் கட்டுப்பாட்டு அறைகளுக்குக் கணினி வழிச் செய்தி மூலம் பகிரப்பட்டு, வான் செய்தி தகவல் மூலம் சம்பந்தப்பட்ட ரோந்து வாகனங்களுக்குத் தெரியப்படுத்தி உடனுக்குடன் அழைத்தவருக்கு உதவிட விரைந்து சென்று ரோந்து வாகன ஆளிநர்களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரோந்து அதிகாரிகளின் முயற்சியால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், வழிதவறிக் கண்டறியப்பட்ட குழந்தைகள் உரிய வழிகாட்டுதல்படி இல்லங்களில் சேர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களின் சேவைகளை மக்கள் பயன்படுத்தவும், புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல முடியாத பொதுமக்களுக்குப் புகாரைப் பெற்று உதவிடவும், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், காவல் ரோந்து வாகனத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும் திட்டத்தை இன்று (04.11.2020) மாலை, சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

அதன்பேரில், சென்னைப் பெருநகரிலுள்ள 124 காவல் நிலையச் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் தினசரி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அந்தந்தக் காவல் நிலையச் சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் உரிய நேரப்படி நிறுத்தப்படும்.

காவல் நிலையம் வர இயலாத மனு செய்யும் புகார்தாரர்கள் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களில் புகார்களைக் கொடுத்து, புகார் மனு ஏற்புச் சான்று (CSR) பெற்றுக் கொள்ளலாம். அந்தப் புகார்கள் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியிடம் சேர்க்கப்பட்டு, மனுதாரருடைய கைப்பேசி எண்ணுக்கு மனு ரசீது எண் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு உரிய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் புதிய திட்டத்திற்காக அனைத்து ரோந்து வாகனங்களுக்கும் ரோந்துக் காவல் ஆளிநர்களிடம் மனு ஏற்பு ரசீது புத்தகம் வழங்கும் முறையைச் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களின் ஆளிநர்கள் பயன்படுத்திட, அனைத்து ரோந்து வாகனங்களுக்கும் பிளாசில் (Flossil) குழும நிறுவனர் அஸ்வின் ரத்தோட் வழங்கப்பட்ட தேடல் லைட் (Search Light), சுடுநீர்க் குடுவை (Flask) ஆகியவற்றை 124 ரோந்து வாகனங்களுக்கும் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் வழங்கினார்.

இது தவிர பெண்கள் அவசர உதவி எண்.1091, பெண்கள் பாதுகாப்பு, பாலியல் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள, குழந்தைத் திருமணம் தடுத்தல், கேலி கிண்டல் செய்தல், தடுத்தல் குறித்த புகார்களுக்கான விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்கள் மற்றும் முதியோருக்கான அவசர உதவி எண்.1253, முதியோருக்கான மருத்துவ உதவி, அவசர உதவி மற்றும் அரசு ஓய்வூதியம் குறித்த ஆலோசனைகள், இல்லங்களில் சேர்த்தல், காணாமல் போனால் தொடர்புகொள்ள முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசுரங்கள் ஆகியவை சென்னைப் பெருநகரக் காவல்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, ரோந்து வாகனக் காவல் ஆளிநர்களுக்கு வழங்கி, அவரவர் காவல் நிலைய சரகத்தில் உள்ள பெண்கள் மற்றும் முதியோர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திட வழங்கினார்.

இது தவிர கடந்த 01.01.2020 முதல் 31.10.2020 வரை, அவசரத் தொலைபேசி எண்100 மூலம் 1,50,686 அழைப்புகளும், பெண்கள் உதவி எண் 1091 மூலம் 36,182 அழைப்புகளும் மற்றும் முதியோர் உதவி எண் 1253 மூலம் 8507 அழைப்புகளும் பெறப்பட்டு உடனடித் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மேலும், சுமார் 481 பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பு இல்லம் மற்றும் உறவினர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகரக் காவல் கூடுதல் ஆணையர்கள் அமல்ராஜ், (தலைமையிடம்), தினகரன், (தெற்கு) அருண், (வடக்கு), நா.கண்ணன்,தேன்மொழி, (மத்திய குற்றப்பிரிவு) காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், சென்னைப் பெருநகரக் காவல் கட்டுப்பாட்டறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி எண்கள் 1091, 044-23452365, முதியோர் உதவி எண்கள் 1253 மற்றும் 044-23452367 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு உதவி பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x