Published : 04 Nov 2020 07:48 PM
Last Updated : 04 Nov 2020 07:48 PM

பாதுகாப்பான, நச்சுத்தன்மை இல்லாத துணி நாப்கின்கள்; சானிட்டரி நாப்கினுக்கு மாற்று: சூழலுக்கும் ஏற்றவை

எஸ் வடிவ துணி நாப்கின்கள்

தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் காலத்தில் அன்றாடப் பழக்க வழக்கங்களில் பெரும்பாலானோர் பாரம்பரியத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மண் பாத்திரத்தில் சமையல், குடிநீர் என மாறிவரும் இளம் தலைமுறையினர் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துத் துணிப்பைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், துணி நாப்கின்கள் பயன்பாடு இன்றைய தலைமுறைப் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.

மாதவிடாய் நாட்களில் தொடர்ச்சியான சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டால் ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நறுமணத்தை ஊட்டுவதற்காகவும் வெண்மைத் தன்மையை உருவாக்குவதற்காகவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இதுதவிர்த்து சானிட்டரி நாப்கின்களால் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. நிலத்தில் கொட்டப்படும் சானிட்டரி நாப்கின்கள் தானாக மட்குவதற்கு 800 ஆண்டுகள் வரைகூட ஆகலாம். இவற்றை எரிப்பதாலும் காற்று மாசு ஏற்படுகிறது. பெருநகரங்களில் குப்பைகளில் வீசப்படும் நாப்கின்களைக் கையாள்வதிலும் சிக்கல் உள்ளது.

சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக டேம்பான்ஸ் எனப்படும் உறிபஞ்சுகள், மாதவிடாய் கப்புகள், ஓவர்நைட் பேண்டீஸ் ஆகியவை இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவை இயற்கையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதில்லை. அதேபோல பயன்படுத்துவதற்கும் அவை எளிதானவை அல்ல. இந்நிலையில் துணியால் தைக்கப்பட்ட நாப்கின்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசுகிறார் 'பிறை' துணி நாப்கின் அமைப்பின் நிறுவனரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவருமான அபிராமி.

நாப்கின்கள் பற்றி அவர் கூறும்போது, ''சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவராக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மாதவிடாய் சுகாதாரம் குறித்த தெளிவு மக்களிடையே இல்லை என்பது புரிந்தது.

பிளாஸ்டிக் நாப்கின்களால் அவர்களின் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். அப்போது நான் துணி நாப்கின்களையே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சானிட்டரி நாப்கின்கள் குறித்து அதிகம் படிக்கத் தொடங்கினேன்.

கடைகளில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்களில் 90 சதவீதம் பிளாஸ்டிக்தான். அதில் சோடியம் பாலி அக்ரோலைட் என்னும் அதிவேக உறிஞ்சு பாலிமர் இருந்ததையும் அதன் எடையை விட 30 மடங்கு எடையை உறிஞ்சும் தன்மை கொண்டதையும் அறிந்தேன். இந்த வேதிப் பொருளால் பிறப்புறுப்பில் வறட்சி, எரிச்சல், அரிப்பு ஏற்படுகிறது. மேலும், சானிட்டரி நாப்கின்களில் புற்றுநோயை உருவாக்கும் டையாசின் வேதிப்பொருள் இருந்ததும் தெரியவந்தது.

ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் சுமார் 150 கிலோ சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் சுமார் 35.5 கோடி பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் உள்ளனர். எனில் எவ்வளவு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படும் என்று பாருங்கள். இவற்றைக் கொண்டு 10 பிரமிடுகளை எழுப்பலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கினேன். ஆனால், இந்த துணி நாப்கின்கள் எங்கே கிடைக்கும் என்றவர்களின் கேள்விக்கு, அப்போது என்னிடம் பதில் இல்லை.

இயற்கை மேல் உள்ள அக்கறை காரணமாகவும் சொந்த ஊரான சிவகாசியில் உள்ள பெண்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாகவும் துணி நாப்கின்களை உருவாக்க முடிவெடுத்தோம். முன்னதாக, சுமார் ஓராண்டுக்கு 50 விதமான துணிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டோம். இறுதியாக 'பிறை' என்னும் துணி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். எனது தாய் இந்தத் தொழிலுக்குப் பக்கபலமாக உள்ளார்.

மடித்து வைக்கக்கூடிய துணி நாப்கின்கள்

நாங்கள் முழுக்க முழுக்கத் துணிகளைக் கொண்டே 3 விதமான வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் நாப்கின்களைத் தயாரிக்கிறோம். S வடிவத்தில் XL, L, M ஆகிய அளவுகளில் துணி நாப்கின்கள் தைக்கப்படுகின்றன. அதேபோல 5 மற்றும் 4 மடிப்புகளோடு மடித்து வைக்கக்கூடிய துணி நாப்கின்கள் L, M ஆகிய அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. இவை கலைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். அவற்றைச் சேர்த்து பட்டன்கள் மூலம் ஒட்டி வைக்கலாம்.

இதில் குறைந்தபட்சமாக 7 அங்குலத்தில் இருந்து அதிகபட்சமாக 11 லேயர்களுடன் 14 அங்குலம் வரை துணி நாப்கின்கள் உருவாக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கும் கேட்கும் அளவுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாகவும் தயாரித்து வழங்குகிறோம். அலசி வெயிலில் காயப்போட வசதியாகத் துண்டு போன்ற அமைப்பிலும் துணி நாப்கின்களை உருவாக்கியுள்ளோம்.

வெள்ளைப் படுதலுக்காக வைக்க பேன்ட்டி லைனர்ஸும் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைக்க சுருக்குப் பை போன்ற பவுச்சையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். இதுவரை 1000 துணி நாப்கின்களை விற்றுள்ளோம். இதன் மூலம் சுமார் 2,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் சேர்வதைத் தடுத்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி'' என்றார் மருத்துவர் அபிராமி.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x