

கோவை மாவட்டம், ராமநாதபுரம் - சுங்கம், கவுண்டம்பாளையம்- ஜி.என்.மில் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இப்பால வேலைகளை விரைந்து முடிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகி வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்பச் சாலைகளின் போக்குவரத்து வசதியினை அதிகரிக்கும் விதமாகவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யும் விதத்திலும் கோவை மாவட்டம் முழுவதும் புதிய பாலங்கள், புதிய சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் போன்ற பணிகள் பெரும்பான்மை இடங்களில் நடந்து வருகின்றன.
அதன்படி, கோவை மாநகரில் காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், உக்கடம் உயர்மட்டப் பாலம் மற்றும் புறவழிச்சாலைகள் அமைத்தல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்துதல் போன்ற பணிகள் முழுமை பெற்றுள்ளன.
மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் திருச்சி சாலையில் ராமநாதபுரம் முதல் சுங்கம் வரையில் 3.15 கி.மீ நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.253 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.20 கி.மீ. நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, ஜி.என் மில் சந்திப்பில் 0.60 கி.மீ. நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ராமநாதபுரம் - சுங்கம், கவுண்டம்பாளையம், ஜி.என். மில் சந்திப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று (04.11.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் பாலத்தை ராட்சச கிரேனில் ஏறி உயரே சென்று பொறியாளர்கள் சொல்லும் தொழில்நுட்ப விஷயங்களையும் கேட்டறிந்தார்.
மேம்பாலப் பணிகளைத் தரமானதாக அமைத்திடவும், பணிகளை விரைந்து முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்களுக்கு ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். இவ்வாய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறும்போது, ''கோவை மாநகர் பகுதிகளில் இப்பாலங்கள் அமைவதால், அனைத்து முக்கியப் பகுதிகளிலிருந்து உள்ளே வருவதற்கும், வெளியில் செல்வதற்குமான பயண நேரம் குறைவதுடன் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்'' என்று தெரிவித்தனர்.