Last Updated : 04 Nov, 2020 04:32 PM

 

Published : 04 Nov 2020 04:32 PM
Last Updated : 04 Nov 2020 04:32 PM

அமைச்சர்களை முதல்வர் அடக்காவிட்டால்; திமுக தக்க பதிலடி கொடுக்கும்: சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பேட்டி

அமைச்சர்களை முதல்வர் பழனிச்சாமி அடக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் திமுக தக்க பதிலடி கொடுக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை நந்தனத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதையடுத்து, விருதுநகரில் திமுக முன்னாள் அமைச்சர்களும் திமுக மாவட்டச் செயலர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம்தென்னரசு எம்எல்.ஏ. ஆகியோர் இன்று கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது, சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலினை தரமற்று பேசினால் முதல்வர் பழனிசாமி பாராட்டுவார் என நினைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவன், இவன் எனப் பேசியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மூலை முடுக்கிலும் சென்று மக்களை சந்திப்பார். ஆனால் துணைக்கு ஆள் இல்லாமல் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொல்லமுடியுமா? காமராஜருக்கு இறுதி மரியாதை செய்தவர் கலைஞர். சங்கரலிங்கனார் கனவை நினைவாக்கவியர் பேரறிஞர் அண்ணா.

9 ஆண்டு காலமாக அதிமுகவினர் தமிழ்நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் சொன்னதில் என்ன தவறு உள்ளது? திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைசெல்லும் அமைச்சராக ராஜேந்திரபாலாஜி இருப்பார்.

தரங்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி நிறுத்த வேண்டும். இல்லையெனில் அவரால் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது" என்றார்.

அதைத்தொடர்ந்து தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. பேசுகையில், "அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கிப் பேச வேண்டும். உங்களிடம் உள்ள எம்.எல்.ஏ. உயிருக்குப் பயந்துகொண்டு இருப்பதாகக் கூறுகிறார். சிவகாசித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? வேறு தொகுதியைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

உங்கள் பக்கம் உண்மை இருந்தால் உங்கள் மீது உள்ள குற்றங்களை பட்டியலிட்டுக் கூறிய திமுக தலைவர் மீது வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என்றால் பரவாயில்லை.

அதைவிட்டுவிட்டு ஸ்டாலினைப் பற்றி கூறுவதற்கும் தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தகுதியும் இல்லை. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமுக தோழர்கள் உங்கள் நாகை அடக்குவார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் எங்கு வந்தாலும் திமுகவினரின் ஜனநாயக முறைப்படியான எதிர்ப்பை சந்தித்துத்தான் ஆக வேண்டும். இந்திராகாந்திக்கே கருப்புக்கொடி காட்டியது திமுக. நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முதலில் சிறை செல்வது ராஜேந்திரபாலாஜிதான்.

பேசுவதை யோசித்துப் பேசுங்கள். உங்கள் வார்த்தைக்கு அதே பாணியில் நாங்கள் பதில் அளிக்க முடியும். முதல்வர் பழனிசாமி அமைச்சர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் திமுக திருப்பி அடிக்கும். அப்போது, திமுகவின் வேகத்தை அமைச்சர்களால் தாங்க முடியாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x