பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும்: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கை:

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பரில் கூடி பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் மீது இரண்டாண்டு காலமாக முடிவெடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அரசியல் கட்சிகள், அமைப்புகள் எனத் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாணையில் ஆளுநரின் காலதாமதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இருக்கிறது. எனினும், அதனைப் பயன்படுத்த விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இருக்கின்றன என்ற விவரத்தை ஆளுநருக்கு எடுத்துக் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மத்தியப் புலனாய்வுத்துறை, பெருமளவு சதிச் செயல் என்பதால் விசாரணை தொடர்கிறது என்பது போன்ற காரணங்களைத் தெரிவித்து தாமதப்படுத்தும் அலட்சிய மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால் அது மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in