Published : 04 Nov 2020 04:01 PM
Last Updated : 04 Nov 2020 04:01 PM

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது உண்மை; வரும் சித்திரைத் திருவிழாவில் சுத்தமான ஆற்றில் கள்ளழகர் இறங்குவார்: அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை

மதுரை

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது உண்மைதான். அதைத் தடுக்கவே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் வரும் சித்திரைத் திருவிழாவில் சுத்தமான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு பந்தல்குடி வாய்க்காலில் ரூ.2.50 கோடியில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் நேற்று இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று பார்வையிட்டனர்.

அதன்பின் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. ஏற்கனவே இருந்த 72 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் 22 வார்டுகளில் பாதாளச் சாக்கடை வசதி கிடையாது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்தினால் மாடி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் பெருகி உள்ளன. எனவே ஏற்கெனவே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயின் கொள்ளளவு குறைவாக உள்ளதால் அதிகமான கழிவுநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்கு புதிய தொழில் நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று வெள்ளைக்கல்லில் செயல்படுகிறது. இரண்டாவதாக வடகரையில் 45 எம்.எல்.டி. கழிவுநீர் சக்திமங்கலத்தில் உள்ளது.

தற்போது கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பந்தல்குடி வாய்க்கால் பகுதியில் உள்ள 5 வார்டுகளின் பயன்படுத்தப்படும் சுமார் 1 லட்சம் லிட்டர் கழிவுநீரூம், செல்லூர் கண்மாயில் இருந்து நிரம்பி வரும் நீர், ஆனையூர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் பந்தல்குடி வாய்க்காலை ஒட்டி தாழ்வான குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர், பந்தல்குடி வாய்க்காலின் வழியாக வைகை ஆற்றில் கலக்கின்றது.

இதனைத் தடுக்கும் வகையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் நிதியின் கீழ் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க 2 மில்லியன் மீட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.2.50 கோடியில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிக்கு ரூ.65 லட்சம் மாநகராட்சி பொது நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியில் தடுப்புகள் மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் டிசம்பர் 2020 மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பின்பு கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும்.

வருகின்ற சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் சுவாமி எழுந்தருளும் போது தூய்மையான சுத்தமான வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x