

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரவ மருத்துவக் கழிவுகளை கையாளும் நடைமுறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அக்டோபர் 27-ம் தேதி வரை தேசிய பசுமை தீர்ப்பாயம் அவகாசம் அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ திரவக் கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் இல்லை. திரவ மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. இத னால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படு கிறது. இதே நிலைதான் எல்லா மருத்துவமனைகளிலும் நிலவு கிறது. அதனால் அரசு விதிகளின் படி அனைத்து மருத்துவமனைகளி லும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த அமர்வு, முதல்கட்டமாக சென்னை யிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், திரவ மருத்துவக் கழிவுகளை கையாளும் நடைமுறை குறித்து அரசு சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன், “இந்த வழக்கு தொடரப்பட்டு 3 மாதங்கள் ஆகின்றன. வழக்கில் கூறப்பட்டுள்ள பிரச்சினை மிக அபாயகரமானது. இது தொடர்பாக அறிக்கை அளிக்காத சுகாதாரத்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமர் வின் உறுப்பினர்கள் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
பின்னர், அடுத்த விசாரணை யின்போது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.