

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்துத் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வந்தார். பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் நேற்று இதுபற்றிக் கூறுகையில், அந்த அறிக்கை தேவையில்லை என்றும், இன்னும் ஏன் இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றக் கருத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதல்வர், அரசு சார்பில் அமைச்சர்களை ஆளுநரிடம் அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே 29 ஆண்டுகள் அவர்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்கூட அவர்களை மன்னித்ததுடன் பழிவாங்கும் எண்ணமில்லை என்றும் கூறிவிட்டனர்.
எனவே ஆளுநர் இனியும் அவர்களின் விடுதலையைத் தாமதிக்கக் கூடாது. ஆளுநர் இதை அலட்சியப்படுத்தினால், போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம். அதுபோல் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை வருடத்தை நிர்ணயம் செய்து, அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்."
இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.