

திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையைப் பராமரித்ததற்காக, ரூ.3 லட்சம் செலுத்துமாறு திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்வ்கிளை உத்தரவு.
தமிழக முதன்மை வனப் பாதுகாவலர், திருச்சி மாவட்ட வன பாதுகாவலர் பதிலளிக்க மதுரைக்கிளை.உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயிலுக்குப் பாத்தியப்பட்ட தெய்வானை யானை கடந்த மே மாதம் 24 ஆம் தேதி யானையை பராமரிக்கும் பாகன் காளிதாசனை தாக்கியது. அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி திருச்சியில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பொள்ளாச்சி ஆனைமலை பகுதிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட வனப்பாதுகாவலர் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கோவில் யானையை பராமரித்ததற்காக ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 32 ரூபாயை செலுத்தக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இது ஏற்கத்தக்கதல்ல. கால்நடை மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே யானை வன காப்பத்திற்கு அனுப்பப்பட்டது. எனவே திருச்சி மாவட்ட யானைகள் காப்பகம் யானை தெய்வானையை பராமரித்ததற்காக ரூபாய் 3 லட்சத்தை செலுத்துமாறு அனுப்பிய நோட்டீஸிற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் திருச்சி மாவட்ட வனக்காவலர், யானை பராமரிப்பிற்காக பணம் செலுத்துமாறு அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்காலத் தடை விதித்தும், இது குறித்து தமிழக முதன்மை வனப் பாதுகாவலர், திருச்சி மாவட்ட வன பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்