

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி வனச்சரகத்தில் யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள அகழியில் 10 வயது குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் யானை நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்ததால் மாவட்ட வனத்துறையினர் சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ள ஜவளகிரி வனச்சரக காப்புக்காடுகளில் 50க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் குடிநீருக்காகக் காப்புக்காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. யானைகளின் கூட்டம் கிராமங்களுக்குள் வருவதைத் தடுப்பதற்காக வனத்துறை சார்பில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களின் அருகே பெரிய பள்ளம் (அகழி) வெட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜவளகிரி காப்புக்காடு அருகே உள்ள சென்னமாலம் கிராமத்தில் 5க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாகச் சுற்றி வந்துள்ளன. தொடர்ந்து நேற்று காலை அகழி வழியாகச் சென்ற கிராம மக்கள் அகழியில் விழுந்து உயிரிழந்த குட்டி யானை குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார் கிராம மக்களின் உதவியுடன் குட்டி யானையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வனத்துறை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவக் குழுவினரால் அந்த இடத்திலேயே குட்டி யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில் குட்டி யானையின் தலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் இறந்துள்ளது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் குட்டி யானையின் உடல் அப்பகுதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ''10 முதல் 12 வயதுடைய குட்டிப் பெண் யானை நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க உதவி வனப் பாதுகாவலர் (பயிற்சி) ஜெகதீஸ்.எஸ்.பகான் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.