Published : 29 Oct 2015 09:12 AM
Last Updated : 29 Oct 2015 09:12 AM

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீதான நடவடிக்கைக்கு 7 சிறப்பு குழு

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு வரும் 5-ம் தேதி முதல் கோயம்பேடு, பெருங்களத்தூர், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தவுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் வெளியூர்களுக்கு தினமும் 750-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின் றன.

தீபாவளி பண்டிகை நவம்பர் 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை. திங்கள்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுத்து சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் பலரும் திட்டமிட்டுள்ளனர். விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிலர் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ அதிக கட்டணம் வசூல், அதிக எடையை ஏற்றி செல்லுதல், பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க மொத்தம் 7 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஆர்டிஓ, வாகன ஆய்வாளர்கள் என 7 பேர் இருப்பார்கள்.

வரும் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் கோயம்பேட்டில் 3 சிறப்பு குழுக்களும், சென்ட்ரல், பெருங்களத்தூர், எழும்பூர் ஆகிய இடங்களில் 4 சிறப்பு குழுக்களும் ஆய்வு நடத்தும். பின்னர், தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பும்போது, செங்கல்பட்டு, பெரும்புதூர், மதுரவாயல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகளில் ஆய்வு நடத்தப்படும். பொதுமக்கள் 044 24749001 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் சஸ்பென்ட் அல்லது ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x