Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோயிலில் இருந்தும் ஒரு செங்கலைக்கூட அகற்றக் கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளஎந்தவொரு கோயிலில் இருந்தும்ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் புனரமைப்பு கமிட்டி அமைப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்,‘‘கருர் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமையான செல்லாண்டியம்மன் கோயில் கார்வழி என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலை இடிக்க அறநிலையத் துறை முடிவுசெய்துள்ளது. இந்தக் கோயிலை இடிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இந்த கோயில் அறநிலையத் துறையின்கட்டுப்பாட்டில் உள்ளதா என்றும், எதற்காக இந்த கோயிலை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதேபோல எத்தனை கோயில்களை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ், ‘‘மனுதாரர் தரப்பில் கூறப்படும் அந்தக் கோயிலைஇடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’’ என்றார்.

அதன்பிறகு நீதிபதிகள், ‘‘தமிழகம் முழுவதும் கோயில்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு தொடர்பாக இதுவரை எத்தனை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கமிட்டி அரசாணைப்படி அமைக்கப்படுகிறதா அல்லது அறநிலையத் துறை சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்படுகிறதா’’ என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இந்த ஒரு கோயில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள எந்தவொரு கோயில்களில் இருந்தும் ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது. இதை நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கவில்லை. அதேநேரம் இதுதொடர்பாக அறநிலையத் துறை ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக கருத்தாக தெரிவிக்கிறோம். ஆணையர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு இதை அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்து விசாரணையை நவ.18-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x