Last Updated : 30 Oct, 2015 07:56 PM

 

Published : 30 Oct 2015 07:56 PM
Last Updated : 30 Oct 2015 07:56 PM

மழை வேளையில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு: நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு இரு பக்கமும் அடி

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மழை பெய்துவரும் நிலையில், நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் செய்வதறியாது திகைத்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் அறுவடையின்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை இவ்வாண்டும் தொடர்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதிய பருவமழை, அணைகள், குளங்களில் நீர் இருப்பு ஆகியவற்றை பொறுத்து கோடை, கார், பிசானம் என்று 3 பருவங்களில் நெல் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். இதில் பருவம் தவறிய மழை, அணைகளில் தண்ணீர் திறந்துவிடுவதில் காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நெல் விவசாயம் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. இவ்வாண்டும் கார் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் இதே கார் பருவத்தில் 13,803 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாண்டு அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், 20,449 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது.

அணை திறப்பு தாமதம்

வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுவிடும். இவ்வாண்டு ஒரு மாதம் தாமதமாக ஜூன் இறுதிவாரத்தில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

மழையால் சேதம்

தற்போது அறுவடை முடியும் முன்னரே பருவமழையின் பிடியில் விவசாயிகள் சிக்க நேரிட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால் மழைக்கு முன்னரே அறுவடையை செய்து முடித்திருக்க முடியும். பெருமழையில் நெற்பயிர்கள் சேதமடைவதை தடுத்திரு க்க முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முன்கூட்டியே சாகுபடியை மேற்கொண்டி ருந்த இடங்களில் அறுவடைப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. மழைக்கு முன் அறுவடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மும்முரம் காட்டுகிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி இன்னும் அறுவடையை முடிக்க முடியவில்லை.

பல வயல்களில் நெல்மணிகள் முற்றி அறுவடைக்கு தயாராகி இருக்கும் நிலையில், தற்போதும் மழை பெய்து வருவது அவர்களை கவலை அடைய வைத்திருக்கிறது. மழை நீடித்தால் மாவட்டத்தில் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைய வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் அறுவடைக்கு இயந்திரங்கள் இல்லாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள்.

இயந்திர தட்டுப்பாடு

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு வேளாண் பொறியியல்துறை சார்பில் தற்போது ஒரு பெல்ட் வண்டியும், 2 டயர் வண்டிகளுமே இருக்கின்றன. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,415 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயல் சேறும் சகதியுமாக தற்போதுள்ள நிலையில் இருந்தால் டயர் வண்டிகளை அறுவடைக்கு பயன்படுத்த முடியாது. பெல்ட் வண்டியைத்தான் பயன்படுத்த முடியும்.

ஒரே ஒரு பெல்ட் வண்டியை வைத்துக்கொண்டு எத்தனை ஏக்கரில் நெல் அறுவடை செய்ய முடியும். அதுவும் இந்த வண்டி மிகப்பழைய மாடல் வண்டி. இதன்மூலம் அறுவடை செய்யும்போது வைக்கோல் வீணாகிவிடும். இதனால் அதை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள்.

தனியாரிடம் அதிக கட்டணம்

ஆனால், தனியாரிடம் நவீன இயந்திர வண்டிகள் இருக்கின்றன. இந்த இயந்திரங்களில் வைக்கோல் சிதைக்கப்படாது என்பதால் அவற்றை விவசாயிகள் பயன்படுத்த முடியும். ஆனால், மணிக்கு ரூ.2,500 வரை அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள். விவசாயிகளும் விளைவித்த பயிரை காப்பாற்ற வேறுவழியின்றி தனியாரிடம் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துகிறார்கள்.

ஒன்றியத்துக்கு ஒன்று

மாவட்டத்தில் விவசாயிகள் சந்தித்துள்ள இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்ட குழு செயலாளர் பி.வேலுமயில் நேற்று கூறியதாவது:

பரந்த நெல் விவசாய பரப்புள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு ஒரு அறுவடை இயந்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தற்போதுள்ள பழைய மாடல் பெல்ட் வண்டியையும் பராமரிப்பதில்லை.

அதை இயக்க ஆபரேட்டர்களும் நிரந்தரமாக இல்லை. டயர் வண்டிகளை சேறும் சகதியுமான வயலுக்குள் இறக்க முடியாது. தனியார் அதிக கட்டணத்துக்கு இயந்திரங்களை வாடகைக்கு கொண்டு வருகிறார்கள். அவர்கள் அரசு மானியத்தில்தான் அந்த இயந்திரங்களை வாங்கியிருக்கிறார்கள்.

ஒரு அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 4 லட்சம் வரையில் அரசு மானியம் அளிக்கிறது. இந்த அளவுக்கு மானியம் பெற்றுக்கொண்டு அதிக கட்டணத்துக்கு அறுவடை இயந்திரத்தை தனியார் அளிக்கும் பிரச்சினையை குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளோம். தனியார் அறுவடை இயந்திரத்துக்கு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூன் முதல் வாரத்திலேயே அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டிருந்தால் தற்போதைய மழைக்கு பயிர்கள் தப்பியிருக்கும். அதையும் அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்யவில்லை. இப்போது மழையில் பயிர்கள் சேதமடையும் நிலை உருவாகியிருக்கிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் அறுவடைதோறும் இத்தகைய பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x