

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில்சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்கள் குறித்தும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே 23-ம்தேதி ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை எம்,பி,, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு ஆர்.எஸ்.பாரதி நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி வரும் நவ.20-க்கு தள்ளிவைத்தார்.