

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் 2020 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக சுவரொட்டி வரைதல், கவிதை பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் ஆகிய பிரிவுகளில் இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளம் (www.elections.tn.gov.in) வாயிலாக இணையவழியில் பங்கேற்கலாம். ‘இந்தியாவில் தேர்தல்கள் மற்றும் 100 சதவீத வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள்’ என்பதுதான் போட்டியின் முக்கிய கருத்துரு. இதில் வரும் 18-ம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.