

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்தால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்து இருக்க மாட்டார். மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் அவர் ஆதரித்து வருகிறார்.
அதனால்தான் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியின் முக்கிய நோக்கமே ஊழல் நிறைந்த அதிமுக அரசை அகற்றுவது என்பதுதான். அதன்படி, ஊழல் நிறைந்த அரசு அகற்றப்பட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்.
குஷ்பு பாஜகவுக்கு சென்றதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர், கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு பாஜக ஆட்சியைப் பற்றி விமர்சனங்களை எழுப்பிவிட்டு, ஏதோ காரணத்தால் தற்போது அதே கட்சியில் சேர்ந்து, 360 டிகிரி வளைந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.