

கந்தசுவாமி கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள திருமணக் கூடம் மற்றும் ஓய்வுக் கூடம் உள்ளிட்டவற்றை புனரமைப்பதற்காக ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலின் சந்நிதி தெருவில் கடந்த 2012-13-ம் ஆண்டில் ரூ.1 கோடி மதிப்பில் பக்தர்களுக்கான ஓய்வுக் கூடம், திருமண மண்டபம் மற்றும் விடுதி அமைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட கட்டிடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர், நாற்காலிகள், மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, மேற்கண்ட கட்டிடங்களை பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்பேரில், திட்ட மதிப்பீடு தயாரித்து ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில், மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், மேற்கண்ட கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.