Published : 02 Oct 2015 12:50 PM
Last Updated : 02 Oct 2015 12:50 PM

கல்கொத்திக்கு போக முட்டத்துவயல் மலைமக்கள் மறுப்பு: அதிகாரிகள் நெருக்குதலை தவிர்க்க கையெழுத்து இயக்கம்

கோவையிலிருந்து பூண்டி செல்லும் சாலையில் சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது முட்டத்துவயல். இங்குள்ள உக்குளம் நீலிவாய்க்கால் பகுதியில் 35 ஆண்டுகளாக குடியிருக்கும் இருளர் சமூக மலைமக்கள் மாற்று இடம் கிடைக்காமல் அவதிப்படுவதாக கடந்த 23-ம் தேதி ‘தி இந்து’ செய்தி பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, அப் பகுதிக்கு உள்ளூர் அதிகாரிகள் சென்று விசாரித்துள்ளனர். இப் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள், முத்தம்மாள் ஆகியோர் கூறியதாவது:

திங்கள்கிழமை உள்ளூர் அதிகாரிக ரெண்டு பேர் வந்து எங்க வீடுகளை ஆய்வு செஞ்சாங்க. இங்கெல்லாம் இடம் கிடையாது, கல்கொத்தியில் இடம் கொடுக்கிறோம், போறீங்களான்னு கேட்டாங்க. நாங்க இங்கேயே ரெண்டு மூணு தலைக்கட்டா இருந்துட்டோம். பக்கத்துல உள்ள வயக்காடுகள்ல வேலை செஞ்சும் பழகிட்டோம். இப்படியிருக்க திடீர்ன்னு 10 கிமீ தள்ளி, கல்கொத்திக்கு எப்படி போகமுடியும்.

எங்களுக்கு இந்த சுற்றுவட்டாரத்துல இடம் தந்தா தாங்க. இல்லேன்னா இந்த இடத்துக்கே பட்டா கொடுங்கன்னு சொன்னோம். அதுக்கெல்லாம் வழியில்லைன்னு சொல்லீட்டு, ‘இங்கே என்ன ரெண்டு மூணு வீடுகள்தான் இருக்கு? எப்படி 70 குடும்பம்ன்னு சொன்னீங்க. உங்களை அப்புறப்படுத்தினாத்தான் சரிவரும்ன்னு சொல்லீட்டு போனாருங்க. எங்களுக்கு கல்கொத்தி வேண்டாம்ன்னு எல்லோருகிட்டவும் கையெழுத்து வாங்கி கலெக்டர்கிட்டவே மனு கொடுக்க வேலை நடந்திட்டிருக்கு என்றனர்.

இந்த மக்களுக்காக மாற்று இடம் கோரும் மடக்காடு பழனிச்சாமி கூறியதாவது:

இந்திரா காந்தி பிரதமரா இருந்த காலத்துக்கு ஆங்காங்கே வயக்காடுகள்லயும் இங்கேயுமா சுமார் 10 குடும்பங்கள் இருந்தன. அப்ப ஒரு டாக்குமென்ட் எழுத்தர் எங்க சார்பா இந்திரா காந்திக்கே கடிதம் எழுதி போட்டுட்டார். அங்கேயிருந்து உத்தரவு வந்தது. எங்கே இடம் இருக்குன்னு பார்த்து உள்ளூர் அதிகாரிகள் ஒரு கிமீ தள்ளியுள்ள மடக்காட்டில் 1.5 ஏக்கர் இடம் கொடுத்தாங்க. அதுல 60 குடும்பங்கள் குடிபோச்சு. மீதி உள்ளவங்களுக்கும் அங்கே ஒரு புறம்போக்கு இடத்தை பார்த்து கொடுத்தாங்க.

அதிலே வேற ஆளுக ஆக்கிரமிச்சுட்டாங்க. இப்ப இங்கே 17 குடும்பங்கள் இருக்கோம். தவிர, 1 கிமீ சுற்றளவில் வயக்காடுகள்ல 50-க்கும் மேலே குடும்பங்கள் தங்கியிருக்கு. கல்கொத்திங்கிறது கோவை குற்றாலம் அருவிக்கு தென்புறத்துல மலை உச்சியில் இருந்தது. அது யானை, மிருகத் தொந்தரவுன்னு சொல்லி, அங்குள்ள ஜனங்களுக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றோம்; வீடு கட்டிக் கொடுக்கிறோம்ன்னு 13 வருஷத்துக்கு முந்தி கூட்டிட்டு வந்தாங்க.

அவங்களை சிறுவாணி சாலையில் நண்டங்கரை பள்ளம் அருகில் குடி வச்சாங்க. அப்படியும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரலை. சாலை வசதியில்லை, வீடுகள் சரியில்லைன்னு பல போராட்டம் செஞ்சு இப்பத்தான் சாலையே போட்டுட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட இடத்துக்கு எங்களையும் போகச் சொன்னா என்ன அர்த்தம்? அதுதான் இவங்களுக்கு இங்கேயே இடம் கொடுக்க வேணுன்னு சொல்லி ஆட்சியர்கிட்ட மனு கொடுக்க கையெழுத்து இயக்கம் நடத்திட்டு இருக்கோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x