

கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, 2-வது நாளான நேற்று சென்னை, காஞ்சி புரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், கள நிலவரம் குறித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழகத்துக்கு புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகும் கள வீரர்களாக நீங்கள் வெளியே செல்கிறீர்கள். முதலமைச்சராக அமர்த்துவேன் என்பது ஒரு மனிதனை அல்ல. ஒரு மாற்றத்தை. அதன் கருவிதான் நான். தொடர்ந்து ஊழல் செய்து கொண்டே இருக்கின்றனர். ஒரு பயமும் இல்லை. ராகத்திலேயே எந்த ராகம் பிடிக்கும் என்று கேட்டால் ‘சுருட்டி' என்கிறார்கள். உங்கள் குரல் சட்டப்பேரவையில் கேட்கப் போகிறது. அதற்கான குணாதிசயங்கள் இன்றே வந்தாக வேண்டும்.
இன்று மாலையுடன் கூட்டம் நிறைவு
திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று நான் அறிவித்ததாக கூறுகின்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம், தேசிய கீதத்தில் ‘திராவிடம்’ என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும். அதை அழிக்க முடியாது. அதனால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இன்று மாலையுடன் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைகிறது.