

நவ.10 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகைளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதியில்லை. திரையரங்குக்கு வெளியிலும், பொது இடங்களிலும், காத்திருப்பு அறைகளிலும் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திரையரங்க வளாகத்துக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நுழைவாயில், வெளியேறும் வழி மற்றும் பொது இடங்களில் கையால் தொடாமல் பயன்படுத்தும் சானிடைசர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும்.
திரையரங்கு நுழைவு வாயிலில், பொதுமக்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். கரோனா அறிகுறியற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். திரையரங்க வளாகம், திரையங்குக்குள் சமூக இடைவெளி கடைபிடிக்க உரிய குறியீடுகள் போடப்பட வேண்டும்.
பொதுமக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறும்போது வரிசையாக செல்வதைப் பின்பற்ற வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள இடங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் பொதுமக்கள், வரிசையாக உள்ள செல்வது, வெளியேறுவதை உறுதி செய்ய ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் போதிய காலஇடைவெளி இருக்க வேண்டும்.
திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படும். மின்தூக்கியில் குறைந்த அளவிலானவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். கழிவறைகளில் நெருக்கடியை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக திரையரங்கங்கள் உள்ள வளாகங்களில் நெரிசலைத் தவிர்க்க காட்சி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
கரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய, முன்பதிவு, திரையரங்க அனுமதி சீட்டு வழங்கும்போது தொலைபேசி எண்ணைப் பெற வேண்டும். காட்சி முடிந்ததும் திரையரங்கை முழுமையாக சுத்தம் செயய வேண்டும். திரைப்பட காட்சி தொடங்கும் முன்பும், இடைவேளையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளிர்சாதன வசதியில் வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரம்பிலும், ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரையிலும் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.