Published : 03 Nov 2020 09:05 PM
Last Updated : 03 Nov 2020 09:05 PM

''மத்தியில் சர்வாதிகார ஆட்சி; மாநிலத்தில் அடிமை ஆட்சி'' - ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு 

சென்னை

ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஒரு நாள் கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்துபோன பிறகு, தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“வீழ்ச்சியுற்ற தமிழகம் எழுச்சி பெற்றாக வேண்டும்! இந்திய மாநிலங்களில் எல்லா வகையிலும் பின்தங்கிவிட்ட தமிழகத்தின் பெருமை மீட்க - உறுதியெடுக்க வேண்டும் என இந்நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்!

அத்தகைய தேர்தல் களத்தைத்தான் நாம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். அதற்காகவே ‘தமிழகம் மீட்போம்’ என்ற தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறோம்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விருதுநகரில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது 234-க்கு 234 தொகுதிகளைத் திமுக கூட்டணி பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நமது வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. வித்தியாசம் என்ன என்பதை அளவிடுவதற்காகத்தான் தேர்தல் நடக்க இருக்கிறது. நான் ஆணவத்தில் பேசுவதாக யாரும் நினைத்துவிடக்கூடாது.

காமராசர் ஆட்சியில் பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன என்றால்; தலைவர் கலைஞர் ஆட்சியில் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டன. காமராசர் ஆட்சியில் பள்ளிக் கல்வி சிறப்புற்று விளங்கியது என்றால், கலைஞர் ஆட்சியில் பள்ளிக் கல்வியோடு கல்லூரிக் கல்வியும் - உயர் கல்வியும் - மருத்துவக் கல்வியும் சிறந்து விளங்கியது.

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளும் அதல பாதாளத்துக்குப் போய்விட்டன. விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம் என்பதால் கல்வித்துறை சீரழிவுகளை மட்டும் சொல்கிறேன்.

புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைக் கொல்லும் கொள்கை. அனைவருக்கும் கல்வி என்பதை சிதைக்கக் கூடியதாக மத்திய அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. சிலர் மட்டும் படித்தால் போதும் என்கிற அளவுக்கு தேர்வுகளைக் கட்டாயமாக்கி, பெரும்பாலான மாணவர்களைப் படிப்படியாக கல்விக் கூடங்களில் இருந்து படிப்படியாக விரட்டத் திட்டமிட்டு இருப்பதுதான் புதிய கல்விக் கொள்கை.

இந்தக் கல்விக் கொள்கையை அதிமுக அரசு ஆதரிக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் தமிழக அரசு, நீட் தேர்வைத் தடுப்பதற்கோ, அதில் இருந்து விலக்குப் பெறுவதற்கோ எந்த முன்முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் 13 மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதனைத் தற்கொலை என்று கூடச் சொல்லக் கூடாது. அது மத்திய - மாநில அரசுகள் நடத்திய கொலைகள்.

அந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்தது. கோச்சிங் சென்டர்களில் லட்சங்களைக் கட்டிப் படிப்பவர்களால்தான் வெற்றி பெற முடியுமானால், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட பட்டியலினப் பிள்ளைகள் எப்படி மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியும்? இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்திக்கவில்லை.

திமுகவின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டு உரிமை இப்போது கிடைத்துள்ளது. இதற்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தார் முதல்வர். அவர் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் நாம் செய்து அந்த மசோதாவுக்கு ஆளுநரின் அனுமதியை வாங்கித் தந்தோம். மத்திய அரசுடன் துணிச்சலோடு மோதுவதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை.

இதேபோல் இன்னொரு துரோகத்தையும் மத்திய - மாநில அரசுகள் செய்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. ஆனால் இந்த வருடம் அப்படித் தர முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்னது.

இதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட முக்கியமாக மத்திய அரசு நியமித்த குழுவில், இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி அரசு சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட இரட்டைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்தது. சமூக நீதி விஷயத்தில் அதிமுக அரசு ஆடிய பொய்யாட்டங்கள்தான் அதிகம். இதுதான் தமிழினத்துக்குச் செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

மத்திய அரசைக் கேள்வி கேட்டால், அவர்கள் நமது கொள்ளையைத் தடுப்பார்கள்; நம் மீது வழக்குகள் பாயும் என்பதால் கைகட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் செய்து கொண்டு இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களையும் பற்றிச் சொன்னால் பல மணி நேரம் பிடிக்கும்.

அதிமுக அரசில் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைச் சொன்னால் போதும். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாகக் காட்ட வேண்டிய நபர்தான் ராஜேந்திர பாலாஜி.

எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர் - இன்னும் சொன்னால் ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரே உயிருக்குப் பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் இருக்கிறது. எனக்கே கொலை மிரட்டல் விடுக்கிறாயா என்று சாத்தூர் அதிமுக எம்எல்ஏ கேட்கும் அளவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.

ஆளும் கட்சி சார்பாக, விருதுநகர் மாவட்டத்தை மட்டுமல்ல, அதிமுக சார்பில் அரட்டல் உருட்டல் செய்வதற்காக தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சராகவே ராஜேந்திர பாலாஜி வலம் வந்து கொண்டு இருக்கிறார். வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.

* திமுக தொண்டர்கள் வீட்டுக் கதவை உடைப்போம். சட்டை கிழிப்போம்.

* கட்டபொம்மனைத் தூக்கில் போட்டது போல கமல்ஹாசனைத் தூக்கில் போட வேண்டும்.

* விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாத்தூர் தொகுதிக்கு உள்ளே நுழைந்தால் பன்றியைச் சுடும் ரப்பர் குண்டால் சுட வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தலில் பல சித்து வேலைகளைச் செய்து அதிமுகவை வெற்றிபெற வைப்பேன்!

* கரோனா நோய் என்பது மக்களுக்கு தரப்பட்ட தண்டனை.

* அதிமுகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவது.

- இவை அனைத்தும் ராஜேந்திர பாலாஜி சொல்லியதன் சுருக்கம்தான்.

அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒருவர் எந்த வார்த்தையை எல்லாம் பயன்படுத்தக் கூடாதோ அந்த வார்த்தைகள் அனைத்தையும் தனது பேச்சுகள், பேட்டிகளில் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள் கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்துபோன பிறகு, தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார்.

இன்றைய அதிமுகவுக்குள் பாஜக அணி என்ற ஒன்று இருக்கிறது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். பாஜக தன்னை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில்தான் ராஜேந்திர பாலாஜி இப்படிச் செயல்பட்டு வருகிறார்.

தினமும் மைக்கைப் பார்த்தால் ஏதாவது உளறும் ராஜேந்திர பாலாஜி, என்றைக்காவது தனது துறையைப் பற்றி பேசி இருக்கிறாரா என்றால் இல்லை. ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்லி இருக்கிறாரா? பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை வாயைத் திறந்துள்ளாரா?

சுமார் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை ஆவின் நிறுவனம் சந்தித்ததால் அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து அமைச்சரின் பதில் என்ன?

மதுரையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் துர்நாற்றம் பிடித்து இருந்ததாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் செய்தார்களே. அதற்கு அமைச்சரால் பதில் தர முடியுமா? மதுரை மாவட்ட பால் திட்டப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

மதுரை மாவட்ட மொத்த பால் குளிர்விப்பான் நிலையத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலி செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இவரது பதில் என்ன?

நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால் விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியதுதான் இவர் இந்தத் துறையைக் கவனிக்கும் லட்சணமா? ஒன்றியங்களில் அவுட் சோர்சிங் முறையில் இருந்த பணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?

விதிமுறைகளுக்கு முரணான பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் என்று அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்புகள் நடந்திருப்பதற்கு அமைச்சரின் விளக்கம் என்ன? மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர் பதவிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாருக்குப் பதில் என்ன?

மதுரை பால் பண்ணையில் நடந்த முறைகேட்டுக்குக் காரணமானவர்களைக் காப்பாற்றியது யார்? இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதில் நடந்துள்ள இமாலயத் தவறுகளுக்கு யார் காரணம்? ஆவின் பால் பைக்கான பாலித்தீன் பிலிம் கொள்முதல் முறைகேட்டால் பலன் அடைந்தவர்கள் யார்?

தென் மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றியது யார்? ஆருத்ரா ஊழலில் இன்றைய உண்மை நிலை என்ன?

இந்த எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஐ.நா. அதிகாரியைப் போல உலகப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜி மீது நடந்து வருகிறது.

ராஜபாளையம் தேவதானத்தில் 35 ஏக்கர் நிலமும், திருத்தங்கலில் இரண்டு வீட்டு மனைகளும், 75 சென்ட் நிலமும் வருமானத்துக்கு அதிகமாக 2011-13 காலகட்டத்தில் இவர் வாங்கியதாக திருத்தங்கல் மகேந்திரன் என்பவர் போட்ட வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது. ஏழு கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ஒரு கோடி என்று கணக்குக் காட்டியுள்ளார் ராஜேந்திர பாலாஜி என்பது குற்றச்சாட்டு.

இதில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இவர் போட்ட மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால் இன்றில்லாவிட்டாலும் திமுக ஆட்சி அமைந்ததும் புழல் வாசம் செய்யப்போகும் மனிதர்தான் ராஜேந்திர பாலாஜி என்பதை அவருக்கும் அதிமுகவினருக்கும் நினைவுபடுத்துகிறேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராண்டு தண்டனை கொடுத்தால் ராஜேந்திர பாலாஜி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன். ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக எம்எல்ஏவான ராஜவர்மன் இடையேயான மோதல் குறித்து வெளிப்படையாகக் கட்டுரை எழுதிய செய்தியாளர் கார்த்திக் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் இருக்கிறார் என்ற செய்தியை அவர் இதுவரை மறுத்துள்ளாரா? இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

ராஜேந்திர பாலாஜிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அடக்க முடியாது. திமுகவால்தான் அடக்க முடியும். மக்கள் சக்தியால்தான் அடக்க முடியும். அப்படி அடக்குவதற்கான தேர்தல்தான் வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தல்.

"எல்லார்க்கும் எல்லாமும்" என்ற லட்சியத்தைக் கொண்டது திமுக, சிலருக்கும் மட்டுமே எல்லாம் என்று சொல்பவர்களாக மத்திய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க முடியாத கோழைகளாக மாநில ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்!

‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்பது திமுக. ஆனால் இன்று நடப்பது ‘மத்தியில் சர்வாதிகார ஆட்சி; மாநிலத்தில் அடிமையாட்சி’.

தமிழ்நாடு செழிக்க, தமிழினம் மேம்பட, தமிழகம் தழைக்க வேண்டும் என்பது திமுக தாங்கள் வளம் பெற்றால் போதும் என்று முப்பது பேர் விருப்பத்துக்கும் வசதிக்கும் மட்டுமே நடக்கும் ஆட்சி இன்றைய அதிமுக ஆட்சி.

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசு என்பது நமது லட்சியம். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அதிமுக அரசின் அடையாளம். இந்தக் கும்பலைக் கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கான போர்தான் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x