வளர்ச்சிப் பணிகள், பருவமழை முன்னேற்பாடுகள்: கோவையில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆய்வு

வளர்ச்சிப் பணிகள், பருவமழை முன்னேற்பாடுகள்: கோவையில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆய்வு
Updated on
2 min read

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை செய்ததோடு, வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகரப் பகுதிகளான புட்டுவிக்கி, பேரூர், ஆத்துப்பாலம், ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நொய்யல் ஆறு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை செங்குளத்தில் தடுப்புச் சுவருடன் கூடிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பி.கே.புதூர் பகுதியில் செங்குளம் வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. உக்கடம் பெரிய குளக்கரையில் எழில்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளைத் தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் அந்தந்தத் துறை அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளைக் குறித்த காலத்தில் தரமாகவும், விரைவாகவும் முடிக்கும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேற்படி இடங்களைப் பார்வையிடுவதற்கு முன்னதாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகரக் காவல் ஆணையாளர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அலுவலர்களிடம் தொழில்துறை அரசு முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் தெரிவித்ததாவது:

''தமிழ்நாடு அரசு கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் தொற்றுப் பரவல் தற்போது குறைந்து வருகிறது. பண்டிகைக் காலம் என்பதனால் பொதுமக்கள் கடை வீதிகளுக்குச் செல்வதையும், பல்வேறு இடங்களுக்குச் சென்று வரும்போது அரசு வழிகாட்டி நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதையும், பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியினைக் கடைப்பிடிப்பதனையும், அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பது, பாலங்கள், சாலைகள் பழுதடைந்திருந்தால் சரி செய்வது, பொதுமக்களுக்குக் குடிநீரைச் சுத்திகரித்துத் தங்கு தடையின்றி விநியோகம் செய்வது, ஆற்றுக் கரையோர கிராமங்களில் வெள்ள முன் அறிவிக்கைகள், போதுமான மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைப்பது, கனமழை வந்தால் கரையோர கிராம மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைப்பது போன்ற ஏற்பாடுகளில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.

தவிர வருவாய்த் துறையின் வட்ட எல்லைக்குள் உள்ள மழைமானிகள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களைத் தணிக்கை செய்து மழைமானிகள், வயர்லெஸ் சாதனங்கள் போன்றவை நல்ல நிலையில் இயங்குவதை அனைத்து வட்டாட்சியர்களும் உறுதி செய்யவேண்டும்.

மேலும், மழைநீரைச் சேகரிக்க ஏற்ற வகையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ள நிலையில் அவற்றிற்குத் தண்ணீர் வழங்கும் வாய்க்கால்களின் வழி சீரமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடவேண்டும். வழங்கல் துறை பொதுமக்களுக்குத் தேவையான அளவிற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிடத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் சுகாதாரத்தினைப் பேணிக் காத்திட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்''

இவ்வாறு என்.முருகானந்தம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in