Published : 03 Nov 2020 06:58 PM
Last Updated : 03 Nov 2020 06:58 PM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார்: அமைச்சர் உதயகுமார்

மதுரை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார்நிலையில் உள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 321 பகுதிகள் 5 அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகவும், 797 பகுதிகள் 3 அடி முதல் 5 அடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகவும், 1096 பகுதிகள் 2 அடி முதல் 3 அடி வரை வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகும். 1919 பகுதிகள் 2அடி குறைவான வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகும். மொத்தம் 4,133 பாதிப்புக்கு உள்ளான தாழ்வான பகுதிகளை முதலமைச்சர் கண்டறிந்து அதற்குரிய தகுந்த அறிவுரை வழங்கி அதில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ள சேதம் ஏற்பட்டபோது தாழ்வான பகுதிகளிலிருந்து வசிக்கும் மக்களை தங்க வைக்கும் வண்ணம் 539 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கி அதன் மூலம் 1,52,088 நபர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது சமூக இடைவெளி கடைபிடிக்கும் வண்ணம் 9,393 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 7,39 ,450 நபர்கள் தங்க வைக்க முடியும். மேலும் 14,232 பெண்கள் உள்ளிட்ட 43,409 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

கால்நடைகளைப் பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சிபெற்ற 5505 காவலர்கள் மற்றும் 691 ஊர்காவல் படையினரும் அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின்கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும், 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளித்து வைக்கப்பட்டுள்ளனர். 3,094 கல்வி நிறுவனங்கள், 2561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளான 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவு நீர்க் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் முடிய சராசரியை விட 24 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 341.9 மில்லிமீட்டர். ஆனால் இந்த வருடம் 424.4 மில்லிமீட்டர் மழை பொய்துள்ளது.

இதில் 6 மாவட்டங்களில் மிக அதிகப்படியான மழை அளவு பதிவாகி உள்ளது. 18 மாவட்டங்களில் அதிகப்படியான மழை அளவு பதிவாகி உள்ளது. 11 மாவட்டங்களில் இயல்பான மழை அளவு பதிவாகி உள்ளது. 2 மாவட்டங்களில் குறைவான மழை அளவு பதிவாகி உள்ளன.

பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை மட்டும்தான் தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்கும்.

இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும். இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பருவ மழை தாக்கம் அதிகமாக இருப்பதோடு மாநிலத்தின் இயல்பான மழை அளவில் 47.32 விழுக்காடு மழையளவு கிடைக்கப்பெறுகிறது.

தமிழகத்தில் 4 -ம் தேதி முதல் 5 தேதி வரை ஆகிய நாட்களில் மதுரை ,விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, கூடல் புதூர் பனங்காடி உள்ளிட்ட 27 தாழ்வானப் பகுதிகளை கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழனால் உருவாக்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தினை முதலமைச்சர் பருவ மழைக் காலத்திற்கு முன்பே செய்து நீர் மேலாண்மையில் ஒரு புதிய புரட்சியை படைத்துள்ளார். இதன் மூலம் பொதுப்பணித்துறை உள்ளாட்சித்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான ஏரி, கண்மாய் எல்லாம் தூர்வாரப்பட்டு பருவமழையால் கிடைக்கும் மழைநீரை 100 சகவீதம் குடிநீருக்காகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x