

மதுபோதை மதி மயக்கும், மனநிலை பாதிக்கும், மானம் இழக்கச் செய்யும் என்பதால் தான் மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்ற வலியுறுத்தல் தொடர்கிறது. ஆனாலும் அதை வெறும் வாசகமாகவே கடந்து செல்பவர்களாகவே பலரும் உள்ளனர்.
அப்படி அசட்டை செய்த இளைஞர் மயிரிழையில் உயிர் தப்பியது பற்றியதுதான் இச்செய்தி.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுக் கழிப்பிடத்தில் மதுபோதையில் வழுக்கி விழுந்தவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இந்தக் கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் உள்ளே செல்பவர்கள் வழுக்கிவிழும் வகையில் அசுத்தமாக உள்ளது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
உள்ளே சென்றவர் வழுக்கி சிறுநீர் செல்லும் சாக்கடையில் விழுந்துள்ளார். மதுபோதையில் இருந்ததால் இவரால் எழுந்திருக்க முடியவில்லை. காப்பாற்றக்கோரி குரல் எழுப்பியும் வெளியில் கேட்கவில்லை. தொடர்ந்து குரல் எழுப்பியும் யாரும் காப்பாற்ற வராததால் மயங்கியுள்ளார்.
இதன்பின் கழிப்பிடம் சென்றவர்கள் சாக்கடையில் விழுந்து கிடந்த நபரை பார்க்காமல் அவர் மீதே சிறுநீர் கழித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் பேருந்துநிலையத்தில் கடைவைத்துள்ள நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கசென்றபோது சிறுநீர் வெளியே செல்லும் சாக்கடையில் ஒருவர் விழுந்து கிடப்பது கண்டு நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் அவரை சாக்கடை குழியில் இருந்து மீட்டனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றி குளிக்கவைத்து மாற்று உடை கொடுத்தனர்.
விழுந்த நபர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே தெரியவந்தது. மது போதையில் இருந்ததால் அவரது பெயரைக் கூட அவரால் சொல்லமுடியவில்லை.
இதையடுத்து மயக்கம் தெளியவைத்து அவரை பேருந்தில் ஏற்றி அவரது ஊருக்கு நகராட்சிப் பணியாளர்கள் அனுப்பிவைத்தனர். இன்னும் சிறிதுநேரம் சாக்கடையில் கிடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்புண்டு. தக்கநேரத்தில் கண்டு காப்பாற்றியதால் உயிர்பிழைத்துள்ளார்.
இதற்குக் காரணம் வழுக்கிவிழுந்தது மட்டுமல்ல. அதிலிருந்து அவரை மீட்கமுடியாமல் தடுக்க மதுபோதையும் தான்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) லட்சுமணன் கூறியதாவது:
ஆட்கள் விழும் அளவிற்கான பள்ளம் அல்ல. மதுபோதையில் நிலை தடுமாறியதால் தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் கழிப்பிடத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.