Published : 03 Nov 2020 06:21 PM
Last Updated : 03 Nov 2020 06:21 PM

வீட்டிலிருந்தே பணி செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபடும் ஆபத்து; நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சத்யபிரதா சாஹூ: கோப்புப்படம்

சென்னை

சொந்த ஊர்களில் வீட்டிலிருந்தே பணிபுரியும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (நவ. 3) தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார் மற்றும் வெ.ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை, ஜனவரி 1, 2021-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு திருத்தி அமைப்பது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கினார். இதன் மீது கட்சிகளின் கருத்தையும் கேட்டறிந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், "கரோனா தொற்று காரணமாக கணினி மற்றும் ஐ.டி துறைகளிலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்து வீட்டிலிருந்தே பணி செய்யக்கூடிய லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபடும் ஆபத்து இருக்கிறது. அவை விடுபடாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் (நான்கு நாட்கள்) நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக விளம்பரங்கள் கொடுத்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும்.

கரோனா காலத்தில் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் உள்ளது. அனைவரும் வாக்களிக்கும் வகையில் மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x