Published : 03 Nov 2020 05:57 PM
Last Updated : 03 Nov 2020 05:57 PM

8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; ராஜஸ்தான் அரசின் தடையை நீக்க தமிழக அரசு தலையிட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

விருதுநகர் மக்களின் வாழ்நிலையையும், சமூகப் பொருளாதார நிலையையும் கணக்கில் கொண்டு ராஜஸ்தான் மாநில அரசு தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடனும், மத்திய அரசுடனும் தமிழக அரசு பேசித் தடையை நீக்கிட அழுத்தம் தர வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான சிறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பட்டாசுத் தொழிலும் விதிவிலக்கல்ல. பொது முடக்கத்தால் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து, கடன்காரர்களாக மாறிப் போயினர்.

இந்நிலையில், பொது முடக்கத்தில் ஓரளவு தளர்வு செய்யப்பட்ட பின்பு, கடந்த இரு மாதங்களாகவே பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. உற்பத்தியான பட்டாசுகள் அனைத்தும் விற்பதற்குத் தயாராக உள்ள நிலையில், திடீரென ராஜஸ்தான் மாநில அரசு, இந்த ஆண்டு பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது விருதுநகர் பட்டாசுத் தொழிலையும், அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

மேலும், ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, கரோனா நோயாளிகளுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ஆகவே, பட்டாசு வெடிப்பதைத் தடை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிப்பதால் மட்டும் காற்று மாசுபடவில்லையெனத் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக ராஜஸ்தான் அரசு, பட்டாசு விற்க, வெடிக்கத் தடை விதித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மத்திய பசுமைத் தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கருத்தையும் கேட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பட்டாசு விற்பது, வெடிப்பது தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரம் பட்டாசுத் தொழிலைச் சார்ந்தே உள்ளது. பல ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய பட்டாசுக் கடைகளும் அதை நம்பி வாழும் லட்சக்கணக்கான வணிகர்கள், அதில் வேலை செய்யும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பட்டாசுத் தொழிலோடு பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேவையில் சுமார் 95 சதவீதம் பட்டாசு உற்பத்தி விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சுற்றி நடந்து வருகிறது.

எனவே, இத்தகைய மக்களின் வாழ்நிலையையும், சமூகப் பொருளாதார நிலையையும் கணக்கில் கொண்டு ராஜஸ்தான் மாநில அரசு இத்தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடனும், மத்திய அரசுடனும் பேசித் தடையை நீக்கிட அழுத்தம் தர வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x