

காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமைப்பணி தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல், மார்க்கெட்டிலிருந்து வெளியேறும் காய்கறிக் கழிவுகளால் நேரிட்ட சுகாதாரக் கேடு ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டத்தை அடுத்த கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால், அங்கு செல்ல காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடக்கம் முதலே மறுத்து வருகின்றனர்.
இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து, பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் காய்கனி மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது.
பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருவதுடன், அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்பினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (நவ. 03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"காந்தி மார்க்கெட்டை நம்பி சுமைப்பணி தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பதில் நியாயமில்லை. எனவே, காந்தி மார்க்கெட்டைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தினர்.
சிஐடியு, எல்எல்எப், எல்பிஎப் மற்றும் உருளைக்கிழங்கு கமிஷன் மண்டி ஆகியவற்றின் சுமைப்பணி தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், எல்எல்எப் மாநிலச் செயலாளர் பிரபாகரன், எல்பிஎப் மண்டல துணைத் தலைவர் ராமலிங்கம், உருளைக்கிழங்கு கமிஷன் மண்டி சங்கச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.