

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் ஒப்பிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை வெளியிடத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜன. 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (நவ. 3) ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டைப் பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடிகளில் முகவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் விதத்தில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.
அந்த மனுவில், "25.10.2020 முதல், தமிழக முதல்வர் பழனிசாமியையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிடும் வகையிலான போஸ்டர்கள் தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் தரக்குறைவான விதத்தில் உள்ளன. இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் அல்லது அச்சிட்ட அச்சகங்கள் குறித்த விவரங்கள் அவற்றில் இல்லை.
சுவரொட்டிகளுக்குப் பொறுப்பான நபரின் அடையாளத்தை மறைக்க வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சுவரொட்டிகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) யு / எஸ் 153 பிரிவை மீறுவதாக உள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும் தேர்தல் செயல்பாட்டில், அரசியல் கட்சிகளுக்கு அவர்களின் நடத்தை குறித்துப் பொருத்தமான வழிகாட்டுதல்களை வழங்க தேர்தல் ஆணையத்திற்குப் போதுமான அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலே எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சினைகள் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.