

"பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஸ்டாலினுக்கு வழங்கிய திருநீற்றை தரையில் கொட்டிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்" என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், "வரும் இடைத்தேர்தல், மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருப்பதைக் காணமுடிகிறது.
தெய்வங்களையும், தெய்வ சின்னங்களையும் கொச்சைப்படுத்துவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விருப்பமுடைய ஒன்றாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஏற்கெனவே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்றபோது அவருக்கு மரியாதை செய்தனர். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சமய சின்னத்தை அவர் திருப்பியளித்து அவமானப்படுத்திவிட்டார்.
இதைப்போன்றே அனைத்து மக்களும் புனிதமாகக் கொண்டாடும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம், என்னைப் பொறுத்தவரை ஒரு கோயிலாகும்.
இங்கு மக்கள் கூடி பெருந்திரளாக நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். இதைப்போல் கட்சியினர் மட்டுமின்றி தெய்வ நம்பிக்கை உடையவர்களும், இல்லாதவர்களும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அங்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சென்ற ஸ்டாலின் அவருக்கு வழங்கப்பட்ட திருநீரை எடுத்து தரையில் கொட்டிவரும் செயலை செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்த ஒன்று. இதற்கு ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்" என்றார்.