Published : 03 Nov 2020 03:49 PM
Last Updated : 03 Nov 2020 03:49 PM

தீபாவளியை முன்னிட்டு 14,757 பேருந்துகள் இயக்கம்; 5 பேருந்து மையங்கள் அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழக்கம்போல் 5 பேருந்து மையங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5-வது ஆண்டாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் 5 இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். வழக்கம் போல் மாதவரம், கே.கே நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

அதன் பட்டியல்

ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளும், முன்பதிவு செய்யப்பட்ட அரசு விரைவுப் பேருந்துகளும் இயக்கப்படும்.

முன்பதிவு மையங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10, தாம்பரம் மெப்ஸி 2, பூந்தமல்லியில் 1 என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் சென்ற ஆண்டைவிடக் குறைவான பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம். ஏனென்றால் கரோனா தாக்கத்தால் ஐடி நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அதனால் பேருந்து எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம்.

சென்ற ஆண்டில் 18,547 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகைக்குப் பின்பு கடந்த ஆண்டு 18,866 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 16,026 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக 5 லட்சம் பேர் மட்டுமே பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கூடுதலாகப் பயணிகள் வந்தாலும் அதற்குத் தேவையான பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்திடம் உள்ளன.

பண்டிக்கைக்கு முந்தைய நாட்களான 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும். பண்டிகைக்குப் பின்பு 15,16,17 மற்றும் 18 நான்கு நாட்கள் பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்படும். வழக்கமான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைப் பெருமளவு குறைத்துவிட்டோம். இனியும் நடந்தால் நடவடிக்கை எடுப்போம். அதற்குரிய ஹெல்ப்லைன் எண்ணும் வழங்கப்படும்.

பண்டிகைக்காக கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 10% போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 20% போனஸ் கோரி தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தும்பட்சத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அரசின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்கப்படும்''.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x