

கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை 7 மாதங்களுக்குப் பின்பு இன்று திறக்கப்பட்டது. இங்கு கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட தென்இந்தியாவின் பெரிய அரண்மனை என்ற சிறப்பை பெற்றது.
தமிழகத்தில் இருந்தாலும் இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பத்மநாபபுரம் அரண்மனை அடைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக, கேரள மக்கள் பத்மநாபபுரம் அரண்மனையின் உள்பகுதியை பார்வையிட முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சுவாமி விக்ரகங்கள், மற்றும் மன்னரின் உடைவாள் பவனியாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கேரள தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சுற்றுலா ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் அரண்மனையை திறந்து மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
அதன்படி நவம்பர் மாதத்தில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனையை திறந்து பார்வையாளர்களை அனுமதிப்பதாக அரண்மனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை திறக்க ஏற்பாடு நடந்தது. ஆனால் திக்கட்கிழமை தோறும் அரண்மனை விடுமுறை என்பதால் இன்று திறக்கப்பட்டது. கரோனா ஊரடங்கில் அடைக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை 7 மாதத்திற்கு பின்பு இன்று (நவ.3) திறக்கப்பட்டது.
வெகு நாட்களுக்குப் பின்பு அரண்மனை திறக்கப்பட்டதால் இன்று காலையில் இருந்து பார்வையாளர்கள் ஆர்வத்துடன் அரண்மனைக்கு சென்றனர். அரண்மனை வாசலிலே தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் முகக்கவசம் அணிந்து கரரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல் காலை 9 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையும், மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையும் பத்மநாபபுரம் அரண்மனையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.