பொது நுழைவாயிலை மூடிய ஐஐடி நிர்வாகம்: பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் புது உத்தரவு

பொது நுழைவாயிலை மூடிய ஐஐடி நிர்வாகம்: பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் புது உத்தரவு
Updated on
1 min read

சென்னை ஐஐடி வளாகத்திற்கு வேளச்சேரியிலிருந்து வந்து செல்பவர்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐஐடி மூடியது. அதைத் திறக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்திற்கு வேளச்சேரியிலிருந்து வந்து செல்பவர்கள் பயன்படுத்துவதற்காக கிருஷ்ணா நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நுழைவாயிலைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடி, ஐஐடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நுழைவாயில் மூடப்பட்டதால், ஐஐடி வந்து செல்பவர்களும், அங்கு அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாவதால் வேளச்சேரி பக்கம் உள்ள கிருஷ்ணா நுழைவாயிலைத் திறக்க ஐஐடிக்கு உத்தரவிடக் கோரி ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த நுழைவாயில் அருகில் மாணவிகள் விடுதி இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதிதான் மூடப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், நுழைவாயிலைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து தென்சென்னை எம்.பி. மற்றும் மனுதாரர் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மட்டுமே மனு அனுப்பியுள்ளனரே தவிர, சென்னை ஐஐடிக்கு அனுப்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்.

அதனால், மனுதாரர் இரண்டு வாரத்தில் சென்னை ஐஐடிக்குப் புதிதாக மனு அனுப்ப வேண்டுமென்றும், அதன் மீது ஐஐடி நிர்வாகம் 4 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in