

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் 'வா தலைவா வா' என்று நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக 'வா தலைவா வா', 'எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான்', 'எங்களின் ஓட்டு உங்கள் ஒருவருக்கு மட்டுமே', 'ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு மட்டுமே' என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்களும் இதேபோல் போஸ்டர் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்குமார் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இளைஞர்களின் எண்ணம். எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது தான். அந்த நம்பிக்கையை இளைஞர்கள் இன்றும் கைவிடவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் தலைவர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து அறிவிக்க வேண்டும். போஸ்டர் மூலம் ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்" என்றார்.