Published : 22 May 2014 10:00 AM
Last Updated : 22 May 2014 10:00 AM

ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்து தகுதித் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி

இரு கைகளை இழந்த நிலையிலும் ஆசிரியராகும் உறுதியுடன், தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து தகுதித் தேர்வுகளை எழுதி வருகிறார் மாற்றுத்திறனாளி ரங்கசாமி.

திண்டுக்கல் அருகே அய்யலூரில் சலூன் கடை வைத்திருக்கும் முருகேசனின் ஐந்தாவது மகன் ரங்கசாமி. இவர் தன் 4வது வயதில் சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். 5 வயதில் காரைக்குடியில் ஒரு ஊனமுற்றோர் பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை படித்தார். திடீரென அப் பள்ளியை மூடிவிட்டனர்.

எனவே தனது சொந்த ஊரில் மீண்டும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளார். ‘எப்படி எழுதுவே?’ என ஆசிரியர் கேட்டபோது நசுங்கிய கைகளின் எஞ்சிய பகுதியை பயன்படுத்தி எழுதுவேன் என்று கூறிய அவர், அதன்படி எழுதிக்காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன் பின் படிப்பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. தேர்வு எழுதும்போது மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி உண்டாம். அப்படியே பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, எம்.ஏ., பி.எட், வரை முடித்துவிட்டார்.

திருச்சி இ.ஆர். பள்ளியில் புதன்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிவிட்டு வந்த ரங்கசாமியிடம் பேசியபோது: எங்கள் வீட்டில் முதல் பட்டதாரி நான்தான். அண்ணன்கள் இருவருமே முடிதிருத்தும் தொழில் செய்கின்றனர். 2 அக்காள்களுக்கும் திருமணமாகிவிட்டது. பத்தாம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கவில்லை. பஸ் விபத்தில் இரண்டு கைகளும் நசுங்கியபோது எனக்கு பெரிதாக விவரம் தெரியாது. ஆரம்ப காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போது என்னை எல்லோரும் பரிதாபமாக பார்த்தார்கள். எழுதுவதற்கு உதவிக்கு யாரையாவது வைத்துக்கொள் என கூறினார்கள்.

நானாக செயல்படுவது என முடிவெடுத்த பின் முதலில் கால்களால் எழுதிப் பழகினேன். சரிவரவில்லை. அடுத்து வாயால் எழுதினேன். அதில் வேகமாக எழுத முடியவில்லை. பின்னர் நசுங்கிய கையின் எஞ்சிய பாகத்தில் எழுத பயிற்சி எடுத்தேன். தற்போது மற்றவர்களுக்கு இணையாக என்னாலும் எழுத முடியும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத் தேர்வில் கூடுதல் நேரத்துக்கு அனுமதி பெற்று எழுதினேன். கல்லூரியில் எல்லா தேர்வுகளையும் குறித்த நேரத்திலேயே எழுதி முடித்துவிட்டேன்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2010-ம் ஆண்டு கோவைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். என்னிடம் சிறிது நேரம் பேசிய அவர் எனது விவரங்களை கேட்டு “நீ ஆசிரியர் ஆக முயற்சி செய்; உன்னால் ஏராளமான தன்னம்பிக்கையுடைய மாணவர்களை உருவாக்க முடியும்” என்றார்.

அப்போது முதல் நான் பி.எட்., முடித்து ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்கிறேன். கடந்த 3 முறை நடந்த தகுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளேன். வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வையும் எழுதியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் ஆசிரியர் ஆகியே தீருவேன் என்றார்.

ரங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க அனைவரும் வாழ்த்தலாமே..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x