

பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் எனத் தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அதிமுக அரசு கரோனா காலத்தில் தொழிலாளர்களுக்குக் கொடிய துரோகம் இழைத்துள்ளது என அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கை:
''கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா என்னும் கொடிய தொற்றை எதிர்த்துப் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத் துறை பணியாளர்கள், போக்குவரத்துத் துறை பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அரசு இடும் பணிகளை 100 சதவிகிதம் நிறைவேற்றி அரும்பணியாற்றி உள்ளனர்.
அதில் பல பேர் தங்களது உயிரையும் கொடுத்து தியாகம் செய்துள்ளார்கள். அந்தத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் கொடுப்பதாக சொன்னதே தவிர, ஆனால், எந்தவித நிவாரணத்தையும் இதுவரை அரசு முழுமையாகச் செய்யவில்லை. கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதாக பல கோடி ரூபாயை இந்த அரசுகள் முறைகேடுகள் செய்துள்ளதாக வெட்ட வெளிச்சமாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இவ்வாறு உழைத்த தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கி வந்த 20 சதவீத போனஸைத் தன்னிச்சையாக பத்து சதவீதமாகக் குறைத்து அதிமுக அரசு அறிவித்துள்ளது. முன்னணிப் பணியாளர்களாகிய பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கு 20 சதவீதத்தைக் கூடுதலாகக் கொடுத்தால் கூட அவர்கள் செய்த பணிக்கு அரசால் ஈடு செய்ய இயலாது.
ஆனால், பத்து சதவீதம் என்னும் ஒரு கொடுமையான அறிவிப்பை அதிமுக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளதை அனைத்து தொழிற்சங்கங்களும் வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக அரசு இதனை மறுபரிசீலனை செய்து அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து பெரும் போராட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.
இதைத் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உடனடியாக அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி வழக்கம் போல் முழுமையான 20 சதவீத போனஸை அறிவிக்க வேண்டும் என தொ.மு.ச., சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. , எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எல்.எப்., எம்.எல்.எப்., பணியாளர் சம்மேளனம், திராவிடத் தொழிற்சங்கம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.