மதுரையில் மழையால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி: மூன்று நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

சித்தரிப்புப் படம்.
சித்தரிப்புப் படம்.
Updated on
1 min read

மதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகப் பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பலியானார்.

ஆனால், அந்த நபர் தனியாக வசித்துவந்ததால் அவரின் உடல் மூன்று நாட்களுக்குப் பின்னரே மீட்கப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் தனியாக வசித்துவந்தார் மூக்கையா (வயது55 ). இவருக்குத் திருமணம் ஆகவில்லை. நாதஸ்வர வித்துவானாக பிழைப்பு நடத்திவந்தார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரையில் பரவலாக கனமழை பெய்தது. மழையின்போது அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.

இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூக்கையா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூக்கையா தனியாக வசிப்பதால் எப்போது வருகிறார் வெளியே போகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால், அக்கம்பக்கத்தினரும் விபத்தை கவனிக்கவில்லை.

மூன்று நாட்களுக்குப்பின் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் இன்று மூக்கையாவின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சுவர் இடிபாடுகளில் உயிரிழந்த நிலையில் மூக்கையா கிடந்ததைக் கண்டுள்ளனர். உடனே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவனியாபுரம் போலீஸார் மூக்கையாவின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in