மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அம்மா கைபேசியுடன் சிம்கார்டு, ரீசார்ஜ் கட்டணம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில்

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அம்மா கைபேசியுடன் சிம்கார்டு, ரீசார்ஜ் கட்டணம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில்
Updated on
1 min read

மகளிர் சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசியுடன் சிம்கார்டு, ரீசார்ஜ் கட்டணமும் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகளிர் சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு சிறப்பு தமிழ் மென்பொருளுடன், கணினிமயமாக்கப்பட்ட அம்மா கைபேசிகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டத்தை விமர்சித்த மு.க.ஸ்டாலின், ‘‘சிம்கார்டு, சார்ஜர்களுக்கு மின்சாரம் யார் கொடுப்பார்கள்? ரீசார்ஜ் யார் செய்வார்கள்?’’ என்றார்.

கைபேசியுடன் சிம்கார்டும் வழங்கி, ரீசார்ஜ் செய்வது, மாதாந்திர இணைப்புக் கட்டணம் ஆகியவற்றுக்கான தொகையையும் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்க முதல்வர் வழிவகை செய்துள்ளார்.

எனவே, இதுபற்றி ஸ்டாலின் கவலைப்படத் தேவையில்லை.

‘மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடன், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்’ என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், அது வழங்கப்படவில்லை என்று ஸ்டாலின் குறை கூறியுள்ளார்.

சுயஉதவிக் குழுக்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் 2011-12 வரை அமலில் இருந்தது. அது மாற்றி அமைக்கப்பட்டு, சுழல் நிதி வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டு ஊராட்சிகளில் உருவாக்கப்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 3 தவணைகளில் ரூ.10 லட்சம் முழு அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.413 கோடி முழு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.466.76 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in