

ராமநாதபுரத்தில் சாலையின் நடுவில் திடீரென காரில் தீப்பற்றியது. அதில் பயணித்த 4 பேர் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி களில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் விளையாட்டுத் துறையால் அம்மா விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காக்களில் விளையாட்டுச் சாதனங்களைப் பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது.
கேரளத்தைச் சேர்ந்தவரும், மத்திய விளையாட்டுக் கல்வி இயக்குநரகத்தில் பணியாற்றும் அலுவலருமான விஜய் தலைமை யில் 4 பேர் கொண்ட குழுவினர் ராமநாதபுரம் செந்தமிழ் நகர் பகுதியில் தங்கியிருந்து விளை யாட்டுப் பூங்காக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்கள் நேற்று காலை ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பகுதியில் உள்ள விளையாட்டுப் பூங்காவை ஆய்வு செய்ய காரில் சென்றனர். அப்போது ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ஆர்.எஸ்.மடை காவல் சோதனைச்சாவடி அருகே திடீரென காரில் தீப்பற்றியுள்ளது.
உடனடியாக விஜய் உள்ளிட்ட 4 பேரும் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். இதுபற்றித் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.