

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் மற்றும் அதன் சுற்று வட்டாரத் தில் செயல்பட்டு வந்த அனுமதி பெறாத 30 சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஏராள மான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. அவ்வப் போது மாசு கட்டுப்பாட்டு வாரியத் தினர் நடவடிக்கை எடுத்தபோதும், சாயக் கழிவு நீர் காவிரியில் கலந்து விடப்படும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீரே செல்கிறது. இச்சூழலில் காவிரியில் சாயக்கழிவு நீர் கலப்பதால் ஆறு முற்றிலும் மாசடைவதுடன், மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன. மேலும், காவிரி நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் சென்றது.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முருகன், செல்வக் குமார், ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள், வரு வாய் துறையினர் ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து பள்ளி பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான சமயசங்கிலி, கலியனூர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் உத்தர வின்பேரில் சாயப்பட்டறைகள் பொக்லைன் மூலம் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதுபோல 30-க்கும் மேற் பட்ட சாயப்பட்டறைகள் அகற்றப் பட்டன. அனுமதி பெறாமல் இயங்கும் சாயப்பட்டறைகளை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.