

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான பணப்பலன்கள் மற்றும் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மின்வாரியம், ஆவின், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை, தமிழ்நாடு சிமெண்ட் கழகம், டாமின் மற்றும் கூட்டுறவு நூற்பாலை, உள்ளிட்ட அனைத்து அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கு 2014-15-ம் ஆண்டுக்கான போனஸ் தொகையை 25 சதவிகிதம் ஆக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு தினக்கூலியாக ரூ.400 வழங்கிடவும், போனஸாக 25 சதவிகிதம் வழங்கிடவும் கோரி வருகிறார்கள்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு பணப்பலன்கள் மற்றும் 25 சதவிகிதம் போனஸ் உடனடியாக வழங்கிட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.