Last Updated : 02 Nov, 2020 09:09 PM

 

Published : 02 Nov 2020 09:09 PM
Last Updated : 02 Nov 2020 09:09 PM

பாண்லே ஊழியர்களுக்கு பால், நெய் இலவசமாக வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் கூடுதல் செலவு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே ஊழியர்களுக்குப் பால், நெய் இலவசமாக வழங்குவதால் ஆண்டுக்கு ரூ. 72 லட்சம் கூடுதல் செலவு ஏற்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்குகின்றன. பால் மற்றும் அதைச்சாரந்த பொருட்களை புதுச்சேரியில் விற்பனை செய்யும் பாண்லே நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது. இங்கு தரப்படும் இலவசம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி பெற்றுள்ளார். அதையடுத்துத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு இன்று புகார் தந்தார்.

அதன் விவரம் தொடர்பாக ரகுபதி கூறியதாவது:

’’புதுச்சேரி கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பால், நெய் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து விவரங்களை இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் பெற்றேன். அதில், பாண்லே நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் 665 பேரும், தற்காலிக ஊழியர்கள் 247 பேர் என மொத்தம் 912 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் மட்டுமல்லாது அனைத்து ஊழியர்களுக்கும் தினமும் 1 லிட்டர் பால், மாதம் ஒருமுறை அரை லிட்டர் நெய் இலவசமாக வழங்கப்படுவதாக தகவல் அளித்துள்ளனர்.

912 ஊழியர்களுக்கு தினசரி 1 லிட்டர் பால் வழங்குவதால் 32 லட்சத்து 83 ஆயிரத்து 200 ரூபாயும், மாதம் அரை லிட்டர் நெய் வழங்குவதால் 39 லட்சத்து 13 ஆயிரத்து 145 ரூபாயும் என ஆண்டிற்கு 71 லட்சத்து 96 ஆயிரத்து 345 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை ஊக்கத்தொகை அளிக்கலாமே தவிர, சராசரியாக அனைத்து ஊழியர்களுக்கும் பால், நெய் இலவசமாக தருவதால் நிறுவனத்தின் நிதிதான் வீணாகும். வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை.அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாக பால், நெய் வழங்குவதற்குப் பதிலாக மானிய விலையில் பால், நெய் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்’’.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x