

பண்டிகை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரித் திறப்பைக் கவனத்தில் கொண்டு தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்ல பயணிகள் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 7 மாதமாக தமிழகம் - கேரளா இடையே பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலம் இடுக்கி பகுதி ஏலத் தோட்டங்களுக்கு வாடகைக்கு வாகனம் ஏற்பாடு செய்து தொழிலாளர்கள் செல்லும் நிலை உள்ளது. அங்கு குடியிருக்கும் தமிழர்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க தேனி மாவட்டத்திற்கே வருவர்.
மேலும் அங்குள்ள மாணவர்கள் ஏராளமானோர் தேனி மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர் .எனவே மாணவர், விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள் நலன் கருதி கேரள அரசோடு பேசி பயணிகள் போக்குவரத்தை துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
போடி தேவர் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பாண்டியன் ,மீனா, தாலுகா குழு உறுப்பினர்கள் பி.சந்திரசேகர், தங்கபாண்டி, மூக்கையா, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .