Last Updated : 02 Nov, 2020 06:12 PM

 

Published : 02 Nov 2020 06:12 PM
Last Updated : 02 Nov 2020 06:12 PM

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் கிரிக்கெட் வீர்கள், நடிகர்கள், நடிகை மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நாளை (நவ.3) விசாரணைக்கு வருகின்றன.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி என்.கிருபாகரன், பி.புழேந்தி அமர்வில் காணொலி வழியாக வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், ஏ.கண்ணன் ஆகியோர் இன்று ஆஜராகி, தமிழகத்தில் இளைஞர்களை சீரழித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஐ.முகமது ரஸ்வி, எஸ்.முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களை விட கரோனா காலத்தில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இணையதளத்தில் பல்வேறு விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்தால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விளையாட்டுகளில் லட்சக்கணக்கான பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகளை கொண்டு விளம்பரம் செய்கின்றனர். இதை நம்பி இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழக்கின்றனர். எனவே ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிப்பது தொடர்பாக உரிய சட்டத்திருத்தங்களை கொண்டுவர வேண்டும். மேலும் ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, சவ்ரவ் கங்குலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமண்ணா மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x