

தமிழகத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு உத்திவைத்தது.
மதுரையைச் சேர்ந்த அருண் அய்யனார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அக். 2-ல் நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 முறை கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது கட்டாயம். இதில் கிராம ஊராட்சிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும்.
இந்தாண்டு கரோனா பரவலால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கமாட்டார்கள் என்று கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.